போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.
இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் சுமுக முடிவு எட்டப்படாத காரணத்தால் இன்று பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் இன்று இரவு 12 மணி முதல் படிப்படியாக பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19,000 பேருந்துகள் இயக்கப்படும். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படும். பொங்கல் முடிந்து ஊருக்கு வருவோருக்கு ஜனவரி 16 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தர்மபுரம், கோயம்பேடு, கிளம்பாக்கம் உள்ளிட்ட 11 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும். அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சுமுகமாக இயக்க நடவடிக்கை எடுக்கும். எதை செய்ய முடியும்; எதை செய்வது சிரமம் என்பதை தொழிற்சங்கங்களுக்கு சொல்லியிருக்கிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் அவர்களால் செய்ய முடியாததை இப்போது அதிமுக தொழிற்சங்கங்கள் செய்ய சொல்வதும், எடப்பாடி பழனிசாமி சொல்வதும் வேடிக்கையான ஒன்று, விந்தையான ஒன்று. நாங்கள் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. நிதிநிலை சீரான பிறகுதான் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறோம். அவர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதற்காகத்தான். அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் வருகின்ற நேரத்தில் இதை செய்தால் மக்களுக்கு கோபம் வரும் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் இதை அறிவார்கள். அவர்களை இடைஞ்சல் செய்வோர் மீதுதான் அவர்களுக்கு கோபம் வரும்'' என்றார்.
அதேநேரம் சென்னையில் திருவான்மியூர் பணிமனையில் பேருந்து நிறுத்தம் தொடங்கியதாக பெயர்ப்பலகையில் அறிவிக்கப்பட்டு பல இடங்களில் பேருந்து நிறுத்தம் அமலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.