காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து. திறக்கப்பட்ட நீரை ஆதாரமாக வைத்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். தற்பொழுது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியாக உள்ளது. நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தற்பொழுது நீர் இல்லாததால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நெற்பயிர் கருதியதால் அதிர்ச்சியிலிருந்த விவசாயி, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகை மாவட்டம் திருவாய்மூரில் விவசாயி ராஜ்குமார் என்பவர் 15 ஏக்கர் இடத்தில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். விவசாயப் பணிக்காக கூட்டுறவு வங்கியில் 2.5 லட்ச ரூபாய் விவசாயக் கடன், எட்டுக்குடியில் மூன்று லட்ச ரூபாய் கடன், உள்ளூரில் இரண்டு லட்சம் என கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் பயிர் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்த அவர், தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.