திருச்சி முசிறி – குளித்தலை பெரியார் பாலத்தில் போக்குவரத்து காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்ததில் அதன் ஓட்டுநர், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டிவந்துள்ளார். மேலும், அந்த வாகனத்தின் முன்பு பம்பர் பொருத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ. 650 அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பம்பரைக் கழட்டும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
அப்போது அவ்வழியே வந்த நோட்டரி பப்ளிக் ஒருவரின் வாகனம் பம்பருடன் வந்துள்ளது. ஆனால் காவல்துறையினர் அதனைக் கண்டுகொள்ளாது அனுப்பினர். இதனைக் கண்ட அபராதம் செலுத்திய வாலிபர், வழக்கறிஞர் வாகனத்திற்கும் அபராதம் விதிக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை செய்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி, ஓர் அறிக்கை வாயிலாக விளக்கமளித்துள்ளார். அதில் வாகனத்தை இயக்கியவர் மீது வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு ஒரு வழக்கும், அவ்வாகனத்தின் முன் பம்பர் பொருத்தியிருந்ததால் அதற்கு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சமூகவலைதள பதிவு குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விசாரணைக்குப் பின் தவறிழைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக முசிறி பகுதியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வடமலையை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.