எருமை மாட்டிற்காக 3 மணிநேரம் நடந்த பாசப்போராட்டம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, வசித்து வருபவர் பழனிவேல். கூலித் தொழிலாளியான இவர் ஆடு,மாடுகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில், வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர் பழனிவேல் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை, பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பழனிவேலை போலீசார் அழைத்து விசாரித்தபோது, எருமை மாட்டைத் தனது உறவினர் ஒருவரிடம் இருந்து வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாகத் தெரிவித்தார். இதனால் செய்வதறியாது தவித்த போலீசார், இறுதியில் மாடு யாரிடம் பாசம் காட்டுகிறதோ அவருடன் மாடு அனுப்பி வைக்கப்படும் என்று கூறி டெஸ்ட் வைத்தனர். மாடு இருவரிடமும் பாரபட்சமின்றி பாசம் காட்டியதால் முதலில் குழப்பமடைந்தனர். அதன்பின் பழனிவேல் என்பவர் சைகை செய்த உடன், மாடு அவரின் பின்னாலே சென்றது. இறுதியில் மாட்டைப் பழனிவேலு உடன் அனுப்பி வைத்து இந்த விசித்திரமான புகாரை முடித்து வைத்தனர்.