சென்னை தாம்பரம் அருகே அதிவேகத்தில் சென்ற கார் இரும்பு தடுப்பு மீது சீறிப்பாய்ந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே மப்பேடு கேம்ப் ரோடு சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிவேகத்தில் வந்த கார் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக ரோட்டில் வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டு மீது எதிர்பாராத விதமாக மோதி ரோட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களின் மீது சீறிப் பாய்ந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது.
இரண்டு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 4 பேர் மீது பாய்ந்த கார் இரண்டு இருசக்கர வாகனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நிற்காமல் சென்றது. இந்த காட்சி சாலையில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு இருசக்கர வாகனத்தில் கிளாட்சன் மற்றும் விக்ரம் என்ற 18 வயதான கல்லூரி மாணவர்கள் 2 பேர் வந்திருக்கிறார்கள். மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் வயது 40, அவருடைய மனைவி சாந்தி என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலரும் அந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் சிக்கிய 4 பேரில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுகம், சாந்தி, கிளாட்சன் ஆகிய 3 பேருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவன் பெற்றோருக்கே தெரியாமல் காரை எடுத்து வந்து ஓட்டியது தெரிய வந்துள்ளது. இந்த கார் அங்கு மட்டுமல்லாது அம்பேத்கர் நகர் என்ற இடத்திலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் வந்ததாகவும் கூறப்படுகிறது. காருடன் தப்பிச் சென்ற அந்த 18 வயது சிறுவனை போலீஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வருகின்றனர்.