கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமால் மனைவி மீரா. திருமால் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீராவின் அண்ணன் மனைவிக்கு புதுபாலப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மீரா தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு நேற்று மாலை புதுபாலப்பட்டு கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து நிகழ்ச்சி முடித்துவிட்டு மீரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மீரா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு மீரா அதிர்ச்சி அடைத்தார். இதுக்குறித்து மீரா வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் உள்ள நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர் ராஜவேல் குழுவுடன் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் உள்ள கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இதுக்குறித்து மீரா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் சங்கராபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விநாயக முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சங்கராபுரம் பகுதியில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் போலீசார் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.