பதிவு செய்யப்பட்ட ஒரு பத்திரத்தை சம்மந்தப்பட்டவரிடம் திருப்பிக் கொடுக்க ரூ. 3 லட்சம் வரை லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் வீடியோவில் சிக்கி தவிக்கிறார். புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று சம்மந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டிவருகின்றனர்.
புதுக்கோட்டை மாலையிடு பகுதியில் உள்ள மௌண்ட் சியோன் பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தை அதே நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்றொரு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றி கொடுக்கும் பத்திரப்பதிவு வழக்கறிஞர் கண்ணன் மூலம் தயாரிக்கப்பட்டு திருமயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் 8 ந் தேதி பதிவு செய்யப்பட்டது. சார்பதிவாளர் மகாலெட்சுமி பதிவு செய்தார். பதிவு செய்த பிறகு சம்மந்தப்பட்ட நிலத்தை பார்வையிட வேண்டும் என்று சொன்னதால் சம்மந்தப்பட்டவர்களின் காரிலேயே சென்று நிலத்தையும் பார்வையிட்டவர் அலுவலகம் வந்து பத்திரத்தை திருப்பி கொடுக்க ரூ. 3 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று கேட்டு பத்திரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.
இதனால் சில நாட்கள் வரை பத்திரத்திற்காக அலைந்தவர்களில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சரவணன் என்பவர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று பத்திரம் பற்றி கேட்டபோது அவரை ஆவண வைப்பறைக்கு அழைத்துச் சென்று ரூ. 3 லட்சம் வரை பணம் வேண்டும் என்று கேட்டதை சரவணன் அப்படியே வீடியோ பதிவு செய்துள்ளார். அதேபோல பல இடங்களிலும் ஆடியோ வீடியோ பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் கிடைக்கவில்லை என்பதால் பத்திரம் கொடுக்கப்படவில்லை.
பல நாட்களுக்கு பிறகு மாவட்ட பதிவாளரிடம் கேட்கச் சொல்லிவிட்டார் சார்பதிவாளர். அங்கே சென்று கேட்டால் பத்திரம் முடக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அங்கேயும் பலமுறை அலைந்தும் பலனில்லை என்பதால் சார்பதிவாளரின் லஞ்சம் பற்றிய வீடியோ பதிவுகளை காட்டிய போது ஆவண வைப்பறையில் எப்படி வீடியோ எடுக்கலாம் என்று பேசிய மாவட்ட பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பிறகே மாநில பதிவுத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளார் வழக்கறிஞர் கண்ணன் மற்றும் சரவணன் ஆகியோர். சிலமாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. பத்திரமும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வழக்கறிஞர் கண்ணன் கூறும்போது. முறையான ஆவணங்கள் கொடுத்து அதற்கான பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டது. ஆனால் பதிவு செய்த பிறகு நிலத்தை பார்க்க வேண்டும் என்றார். அதையும் காட்டியாச்சு. அதன் பிறகு ஒரு பெருந்தொகையை சொல்லி வாங்கி கொடுக்கச் சொன்னார். நான் முடியாது என்றதும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் தரப்பில் இருந்து சரவணனை அழைத்து அவரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். கொடுக்கவில்லை என்பதற்காக இதுவரை பத்திரத்தை கொடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவும், பத்திரம் கிடைக்கவும் பத்திரபதிவு துறை தலைவர் வரை புகார் கொடுத்திருக்கிறோம். விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜராகவும், ஆதாரங்களை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் அழைப்பு இல்லை என்றார்.