Skip to main content

மாலை வரை வீடு திரும்பாத சிறுவர்கள்... கதறிய பெற்றோர்கள்!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

Boys who do not return home until the evening

 

கோவை, சூலூர் முதலிபாளையத்தில் உள்ள குட்டையில் தண்ணீரில் விளையாடிய சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகினர். சூலூர் அருகே முதலிபாளையம் எனும் பகுதி உள்ளது. இங்கு ஊரின் ஒதுக்குப்புறமாக 20 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இதில் சமீபத்தில் பெய்த மழைக்கு சுமார் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. 

 

இதில் அதே ஊரைச் சேர்ந்த  மேற்கு வீதி அன்பழகன் மகன் சதீஷ்குமார் (14, ஏழாம் வகுப்பு), பட்டத்தரசியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் பூபதி (14, எட்டாம் வகுப்பு) மற்றும் சுரேஷ் என்பவரது மகன் சபரிவாசன்(12, ஆறாம் வகுப்பு) ஆகிய மூவரும் வியாழக்கிழமை (28.10.2021) காலை விளையாடச் சென்றுள்ளனர். சபரீசன் தந்தை சுரேஷிற்கு வாய் பேச முடியாது மற்றும் தாய்க்கு காது கேட்காது. இவர்கள் தர்மபுரி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்தில் உள்ள முதலிபாளையத்தில் தங்கி கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

 

பூபதியின் தாய் பூபதி பிறக்கும்போதே இறந்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவரது தந்தை  முத்துக்கவுண்டன் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். தந்தை ஆறுச்சாமி பூபதியை மூன்று நாள் குழந்தையிலிருந்து வளர்த்ததாகவும் மகனுக்காக திருமணமே செய்துகொள்ளாமல் இத்தனை காலம் பேணிப் பாதுகாப்பதாக கூறி அழுதார். மூவரும் அரசூர் அரசுப் பள்ளயில் 6ஆம் வகுப்பு மற்றும் 7ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு படித்துவருகின்றனர். அப்போது மூவரும் துணிகளைக் கரையில் கழற்றி வைத்துவிட்டு நீரில் இறங்கி குளித்துள்ளனர். மூவருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

 

அப்போது குட்டையில் இருந்த சேற்றில் மூவரிம் சிக்கிக்கொண்டனர். காலை 10 மணிக்கு குட்டைக்குச் சென்றவர்கள் மாலை 5 மணியாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடி குட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது கரையில் மூன்று பேரின் துணிகள் மற்றும் செருப்பு இருந்த நிலையில் சிறுவர்களைக் காணவில்லை. சந்தேகமடைந்த அப்பகுதி இளைஞர்கள் குட்டையில் இறங்கி தேடியபோது சிறுவர்கள் மூவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர் சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன் தலைமையிலான போலீசார், சிறுவர்களின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்