![boyfriend who incident his girlfriend brother who was against love](http://image.nakkheeran.in/cdn/farfuture/m7DPStOyh1VRYGK_zyvuEDuN8v9-eldjlh_2-I_9s4g/1707454890/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_117.jpg)
புதுக்கோட்டை அடப்பன்வயல் 6-ம் வீதி சிங்காரம் மகன் ஒச்சி கார்த்தி (எ) கார்த்தி (25). இவரது தங்கையும், மேல 6-ம் வீதி அரியமுத்து மகன் 29 வயது சீனிவாசனும் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த ஒச்சி கார்த்தி தன் தங்கை மீதான காதலை விடுமாறு சீனிவாசனிடம் கூறியுள்ளார். சீனிவாசனோ காதலை துண்டித்துக்கொள்ள மறுத்துள்ளார். இதனால சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
கார்த்தி தன் தங்கையுடனான காதலை விட வலியுறுத்தி வந்த நிலையில் தான் தன் காதலை விட மனமில்லாத சீனிவாசன் தன் காதலுக்கு தடையாக உள்ள தன் காதலியின் அண்ணன் கார்த்தியை தீர்த்துக்கட்ட தன் நண்பர்களுடன் சேர்ந்து முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் (7.2.2024) கார்த்தி விஸ்வநததாஸ் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டைப் பார்க்க வந்த போது பின் தொடர்ந்து வந்த சீனிவாசன், அவரது நண்பர் அடப்பன்வயல் 3-ம் வீதி நாகராஜன் மகன் நெருப்பு தினேஷ் என்கிற தினேஷ் (25), மற்றும் ஒருவர் என 3 பேரும் சேர்ந்து கார்த்தியை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
பலத்த காயமடைந்து கீழே சாய்ந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருக்கோகர்ணம் போலிசார் கார்த்தி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். இதில் ஒச்சி கார்த்தி, சீனிவாசன் ஆகியோர் நண்பர்களாக சேர்ந்து பல வழக்குகளில் சிக்கி வெளிவந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காதலுக்கு தடையாக இருந்த நண்பனான காதலியின் அண்ணனையே வெட்டிச் சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.