திருவள்ளூர் அருகே விதிகளை மீறி 16 வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை இயக்கிய போது லாரியில் மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்துள்ள பஜனைக்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருடைய மகன் தருண் (16) வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செவ்வாப்பேட்டை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க இரு லாரிகளுக்கு இடையே சென்ற பொழுது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்து செவ்வாப்பேட்டை போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி லாரிகளுக்கு இடையே புகுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. பள்ளி மாணவரான சிறுவனை எப்படி இருசக்கர வாகனத்தை இயக்க வீட்டில் இருந்தவர்கள் அனுமதித்தார்கள் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.