ஆந்திர மாநிலம் சதியவேட்டைச் சேர்ந்தவர் பூபாலன்(47). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரிதா(42). இந்த தம்பதியினருக்கு பாவனா(15), என்ற மகளும், டெண்டுல்கர் குமார்(13) என்ற மகனும் உள்ளனர். இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி பால யோகி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த டெண்டுல்கர் குமார், விடுமுறை நாளான நேற்று(28.11.2024) சக நண்பர்களுடன் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தரைக்குக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கிணற்றுப் படியிலிருந்து தவறி விழுந்த பள்ளிச் சிறுவன் டெண்டுல்கர் குமார் மாயமான நிலையில் சக நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பெற்றோர்கள் மகன் டெண்டுல்கர் குமாரை காணவில்லை என்று அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர்.
இதனிடையே தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சிறுவன் கிணற்றில் மாயமானதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி சிறுவனின் உடலை மீட்டனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் சிறுவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.