நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்கள் குறித்து பேசியது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இதனைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் தேர்தல் நேரத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், சீமானின் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் எனப் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து இன்று ஆதித்தமிழர் பேரவை சார்பாக தமிழகத்தின் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆதித்தமிழர் பேரவை அமைப்பினருக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்பொழுது பாட்டில்கள் மற்றும் கற்கள் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை நோக்கி வீசப்பட்டதால் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.