Skip to main content

ப்ளாஸ்டிக் பாட்டிலில் கட்டப்பட்ட பாத்ரூம்... குப்பையிலும் சாதித்த மேதைகள்!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அன்றாடம் டன் கணக்கில் குப்பைகள் சேருகின்றன. அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இவைகள் மாநகராட்சிக்குச் சொந்தமான பெருமாள்புரம் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு அவைகளின் சில கழிவுகள் உரமாகத் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாகவும் தரப்படுகிறது. மற்றவை சேமிக்கப்படுகின்றன. இத்திட்டப் பணிகளுக்கென்று நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தரப் பிரிப்பிலிருக்கின்றனர்.

காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மாலையில் வீடு திரும்பும் போது கூட, அவர்கள் குளித்துவிட்டுச் செல்லும் குளியலறை வசதிகள் கூட கிடையாது. இது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் மேலதிகாரிகளுக்கும் நெருடலாகவே இருந்திருக்கிறது. இந்த நிலையில் கரோனா சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளுக்கென்று அரசு மருத்துவமனை வந்தவர்கள் மற்றும் தனிமைப் படுத்துதல் மையம் போன்ற பகுதிகளிலிருந்தவர்களுக்கு உணவுடன் குடிநீர் பாட்டில்களும் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அவைகளின் ஒரு லிட்டர் காலி பாட்டில்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேல் சேர்ந்துள்ளன. தவிர அன்றாடம் நகரில் வரும் காலி பாட்டில்கள் வேறு.

இதைப் பார்த்த மாநகராட்சி சுகாதாரத் துறை டாக்டர் அருண்குமார் மற்றும் அதிகாரி ஸ்டாலின் போன்றவர்கள் பணியாளர்களுடன் சேர்ந்து ஆலோசித்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்கள் மக்காதவை, அவைகளில் கடல் மணலை நிரப்பி அடைத்து செங்கற்களுக்குப் பதிலாக கடல் மண் நிரப்பப்பட்ட பாட்டல்களை கொண்டு சிமெண்ட் கலவைகளை உருவாக்கி கட்டிடமே கட்டிவிடலாம் என்ற யோசனை ஏற்கப்பட்டு, பணிகளை உடனே தொடங்கினர். இலவசக் கடல் மணல். பணியாளர்களின் உழைப்பு, அத்துடன் கடல் மணல் பாட்டில்களைக் கொண்டு அட்டகாசமான தங்களுக்குத் தேவையான குளியலறையை அமைத்துவிட்டனர்.

பார்ப்பதற்கு அதிசயமானாலும் பலர் இந்தப் பாட்டில் குளியலறையை வியந்து பார்க்கின்றனர். மட்டுமல்ல தற்போது அந்தக் குளியலறையில் குளிப்பதற்கு வசதியான ஷவர் டைப்பும் அமைக்கப்பட்டு வருகிறது. அபரிமிதமான செலவு குறைவு. இலவச மூலப்பொருட்கள், மனித உழைப்பு இவைகளே சுமார் நானகு லட்சத்திற்கு இணையான கட்டிடத்தை உருவாக்கிவிட்டது. மலைபோல் கொட்டிக்கிடந்த காலி பாட்டில்களுக்கும் தீர்வு கிடைத்தது. அதோடு அவர்களின் நீண்ட நாள் குறையான குளியலறைப் பிரச்சனைக்கும் ஃபுல்ஸ்டாப் விழ, ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்தி சாதித்திருக்கிறார்கள் இந்தக் குப்பையில் புழங்கும் மேதைகள்.

காலிபாட்டல்களை டிஸ்போஸ் செய்வது பிரச்சினை தான். மாறுபட்டு யோசித்ததில், அவைகளில் கடல் மண்ணை அடைத்து வெளிவராமல் செய்து குளியலறையை உருவாக்கிவிட்டோம். செங்கற்களைப் போன்று இவைகள் ஸ்ட்ராங்க். பணியாளர்களின் குறையும் நீங்கியது என்கிறார் மாநகராட்சி மருத்துவரான டாக்டர் அருண்குமார்.

குப்பையில் மட்டுமல்ல, தூணிலும், துரும்பிலும் இருப்பார்கள் மேதைகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.