தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அன்றாடம் டன் கணக்கில் குப்பைகள் சேருகின்றன. அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இவைகள் மாநகராட்சிக்குச் சொந்தமான பெருமாள்புரம் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு அவைகளின் சில கழிவுகள் உரமாகத் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாகவும் தரப்படுகிறது. மற்றவை சேமிக்கப்படுகின்றன. இத்திட்டப் பணிகளுக்கென்று நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தரப் பிரிப்பிலிருக்கின்றனர்.
காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மாலையில் வீடு திரும்பும் போது கூட, அவர்கள் குளித்துவிட்டுச் செல்லும் குளியலறை வசதிகள் கூட கிடையாது. இது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் மேலதிகாரிகளுக்கும் நெருடலாகவே இருந்திருக்கிறது. இந்த நிலையில் கரோனா சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளுக்கென்று அரசு மருத்துவமனை வந்தவர்கள் மற்றும் தனிமைப் படுத்துதல் மையம் போன்ற பகுதிகளிலிருந்தவர்களுக்கு உணவுடன் குடிநீர் பாட்டில்களும் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அவைகளின் ஒரு லிட்டர் காலி பாட்டில்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேல் சேர்ந்துள்ளன. தவிர அன்றாடம் நகரில் வரும் காலி பாட்டில்கள் வேறு.
இதைப் பார்த்த மாநகராட்சி சுகாதாரத் துறை டாக்டர் அருண்குமார் மற்றும் அதிகாரி ஸ்டாலின் போன்றவர்கள் பணியாளர்களுடன் சேர்ந்து ஆலோசித்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்கள் மக்காதவை, அவைகளில் கடல் மணலை நிரப்பி அடைத்து செங்கற்களுக்குப் பதிலாக கடல் மண் நிரப்பப்பட்ட பாட்டல்களை கொண்டு சிமெண்ட் கலவைகளை உருவாக்கி கட்டிடமே கட்டிவிடலாம் என்ற யோசனை ஏற்கப்பட்டு, பணிகளை உடனே தொடங்கினர். இலவசக் கடல் மணல். பணியாளர்களின் உழைப்பு, அத்துடன் கடல் மணல் பாட்டில்களைக் கொண்டு அட்டகாசமான தங்களுக்குத் தேவையான குளியலறையை அமைத்துவிட்டனர்.
பார்ப்பதற்கு அதிசயமானாலும் பலர் இந்தப் பாட்டில் குளியலறையை வியந்து பார்க்கின்றனர். மட்டுமல்ல தற்போது அந்தக் குளியலறையில் குளிப்பதற்கு வசதியான ஷவர் டைப்பும் அமைக்கப்பட்டு வருகிறது. அபரிமிதமான செலவு குறைவு. இலவச மூலப்பொருட்கள், மனித உழைப்பு இவைகளே சுமார் நானகு லட்சத்திற்கு இணையான கட்டிடத்தை உருவாக்கிவிட்டது. மலைபோல் கொட்டிக்கிடந்த காலி பாட்டில்களுக்கும் தீர்வு கிடைத்தது. அதோடு அவர்களின் நீண்ட நாள் குறையான குளியலறைப் பிரச்சனைக்கும் ஃபுல்ஸ்டாப் விழ, ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்தி சாதித்திருக்கிறார்கள் இந்தக் குப்பையில் புழங்கும் மேதைகள்.
காலிபாட்டல்களை டிஸ்போஸ் செய்வது பிரச்சினை தான். மாறுபட்டு யோசித்ததில், அவைகளில் கடல் மண்ணை அடைத்து வெளிவராமல் செய்து குளியலறையை உருவாக்கிவிட்டோம். செங்கற்களைப் போன்று இவைகள் ஸ்ட்ராங்க். பணியாளர்களின் குறையும் நீங்கியது என்கிறார் மாநகராட்சி மருத்துவரான டாக்டர் அருண்குமார்.
குப்பையில் மட்டுமல்ல, தூணிலும், துரும்பிலும் இருப்பார்கள் மேதைகள்.