சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இன்று பகல் 12 மணியளவில் சேலம் மாநகர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம நபர் ஃபோனில் தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், பெரியார் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் உடனடியாக பெரியார் பல்கலைக்கழகம் விரைந்தனர். மோப்ப நாயும் அழைத்துச் செல்லப்பட்டது.
துணைவேந்தர் அறை, டீன் அறை, பதிவாளர் அலுவலக அறைகள், கட்டிடப் பிரிவு அலுவலகம் மற்றும் முதன்மை கட்டடத்திலுள்ள அனைத்து அறைகளிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். தேர்வுக்காக கொண்டு வரப்பட்டிருந்த விடைத்தாள் கட்டுகளைப் பிரித்தும் சோதனை நடத்தினர். தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணையில், மிரட்டல் விடுத்த மர்ம நபர் சேலம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பங்களா பின்புறம் உள்ள ஏ.கே.எஸ். மளிகைக் கடையில் உள்ள ஒரு ரூபாய் காயின் ஃபோனில் இருந்து பேசியிருப்பதும், 0427-2405435 என்ற எண்ணில் இருந்து பேசியிருப்பதும் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.