உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. பொதுவாகக் கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சைபர் செக்கியூரிட்டி தொழில் நுட்பங்களை பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கி வழங்கி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைபர் செக்கியூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்(CrowdStrike) நிறுவனம் நேற்று வெளியிட்ட புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்று கூறப்படுகிறது. கணினிகளில் பாதுகாப்பிற்காக பால்கன் எனப்படும் சென்சார் அடிப்படையிலான முக்கிய சாஃப்ட்வேரை கிரவுட்ஸ்டிரைக் உருவாக்கி இருந்த நிலையில் அதனை விண்டோஸ் அப்டேட்டில் இணைத்தபோது சென்சார் செயலிழந்து புளூ ஸ்க்ரீன் எரர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கி, விமானம், ரயில், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் பங்குச் சந்தைகள் மற்றும் வங்கிகள் முடங்கின.
மேலும், இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் நேற்று இருந்து விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, ஹைதராபாத், கோவை, பெங்களூர், லக்னோ, மும்பை போன்ற பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் நேற்று சேவை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகியுள்ளது. இந்த சூழலில் அடுத்த கட்டமாக பயணம் மேற்கொள்வதற்கு பயணிகள் தொடர்ச்சியாக நீண்ட வரிசையில் நின்றும், விமான நிலைய அதிகாரிகள் செக் இன் படிவங்கள் கையால் எழுதிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விண்டோஸ் மென்பொருளின் சேவை சீராகி வருவதால், தற்போது சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் வழக்கமான முறைப்படி போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலுக்குள் விமானச் சேவை முற்றிலுமாக சீராகும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.