மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்த, சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், அவருடன் 'நெருக்கமாக' இருந்துவிட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான பெண் மருத்துவர் ஒருவருக்கும் சேலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. நாள்கள் செல்லச்செல்ல அவர்களுக்குள் நட்பு இறுக்கமாகி, இருவரும் காதலை பரிமாறிக்கொண்டனர்.
கூடா நட்பு கேடாய் முடிந்த கதையாக இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்தப் பெண் மருத்துவர் தனது பெற்றோரிடம் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி எடுப்பதற்காக அவசரமாக செல்ல வேண்டும் எனக்கூறிவிட்டு கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சேலம் வந்து சேர்ந்தார். அவரை அன்புடன் வரவேற்ற சேலம் பொறியியல் பட்டதாரி வாலிபர், காதலியை சேலம் நான்கு ரோடு அருகே உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அந்த ஹோட்டலில் இருவரும் பலமுறை கணவன், மனைவி போல நெருக்கமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு உணவு சாப்பிடுவதற்காக, அந்த பெண் மருத்துவர் ஹோட்டலின் கீழ் தளத்தில் இருக்கும் உணவகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். பதற்றம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இதுகுறித்து பள்ளப்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அந்த பெண் மருத்துவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விசாரணையில் அவர், தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்து இருப்பது தெரிய வந்தது.
மேலும், சேலத்தில் உள்ள தனது காதலர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னுடன் 'நெருக்கமாக' இருந்ததாகவும், இப்போது திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.
பெண் மருத்துவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும்போது அவருடைய காதலரும் உடன் இருந்துள்ளார். ஒருமுறை அவரை தன் காதலர் என்றும் மற்றொருமுறை அவரை நண்பர் என்றும் முன்னுக்குப்பின் முரணாகவும் கூறியுள்ளார்.
அந்தப் பெண் மருத்துவர், காதலனுக்கு பிஸினஸ் செய்ய வேண்டும் எனக்கூறியதன்பேரில் 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அந்தப் பணத்தையும் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மஹாராஷ்டிராவில் உள்ள பெண் மருத்துவரின் பெற்றோருக்கும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். அவர்களும் அங்கே பிரபல மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் சேலம் வந்த பிறகு, மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் எனத்தெரிய வருகிறது.