Skip to main content

“பாஜக அரசின் இசுலாமிய வெறுப்பினால் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை” - சீமான்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

 “A blatant retaliation against Islamophobia by the BJP government” - Seeman

 

“பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் செயல் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது. நாடறியப்பட்ட சனநாயக அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் வீரியமிக்கச் செயல்பாடுகளை முடக்குவதற்காகத் தொடுக்கப்பட்டுள்ள இக்கொடும் அடக்குமுறை நடவடிக்கையானது பாசிசப்போக்கின் உச்சமாகும். 

 

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாடு முழுமைக்கும் இசுலாமிய மக்கள் மத ஒதுக்கலுக்கும், கொடுந்தாக்குதல்களுக்கும், உரிமைப் பறிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகிற வேளையில், இசுலாமிய மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பான நலவாழ்வுக்காகவும் பாடுபடுகிற வலிமைவாய்ந்த இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக்குமுறலையும், ஆற்றாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டையும், மக்களையும் மதத்தால் துண்டாடி, வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டி, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மக்களின் வாக்குகளை வேட்டையாடி, ஆட்சியதிகாரத்தை அடைந்து, இந்தியாவை இந்துராஷ்டிராவாக மாற்ற முனையும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு எவ்விதத் தடையுமில்லாத நாட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற மக்கள் இயக்கங்களுக்குத் தடைவிதிக்கப்படுவது இந்நாட்டின் சனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும்.

 

ஆகவே, இத்தடை நடவடிக்கை என்பது பாஜக அரசின் இசுலாமிய வெறுப்பினாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையேயாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தையும், வன்மையான எதிர்ப்புணர்வையும் பதிவு செய்வதோடு, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கம் சட்டத்தின் உதவியோடு தடையைத் தகர்த்து மீண்டுவர துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.