சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா இன்று (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று பேசினார். இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘திராவிடம்’ என்ற வார்த்தையை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகள் மீது ஆளுநருக்கு மிகுந்த மரியாதை உண்டு. டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதை தவிர வேறு எந்த பங்கும் ஆளுநருக்கு இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடும் குழுவினரே, ‘திராவிட’ வரிகளை தவறவிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசுகையில், 'இது இன்றைக்கு நேற்றைக்கு நடந்த விவகாரம் அல்ல. இந்த விழாவானது வழக்கமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது. அதேபோல் தமிழை பாதுகாப்பதில்; தமிழை உலக அளவில் எடுத்துக் கொண்டு சென்றதில் முதன்மையாக இருப்பது பிரதமர் மோடி தான்; பாரதியாருக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை அமைத்தது; திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சென்றது; பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே உலகம் முழுவதும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் செயல்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது எங்கே பிரச்சனை என்றால் தமிழக முதல்வர் கவனத்தை திசைத் திருப்புவதற்காக இப்படி பேசி உள்ளார். காலையில் காங்கிரஸ் தலைவர் ஒரு ட்வீட் போடுகிறார்.
அதைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்தவர்களும் காங்கிரசை சேர்ந்தவர்களும் ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அதைத் தொடர்ந்து ஒரு சின்ன ஆர்ப்பாட்டத்தை செய்கிறார்கள். அதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா? என பார்க்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த தவறு, அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள். ஆனால் இதில் ஆளுநரை தொடர்பு படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. எந்த விதத்திலும் தர்மமும் கிடையாது. அரசியல் எல்லா விஷயங்களிலும் பண்ணுவதற்கு அல்ல. மழை வெள்ளத்தை திமுக அரசு சரியாகக் கையாளவில்லை. ஒருநாள் மழைக்கே திட்டமிடல்கள் இல்லை. இதையெல்லாம் மக்களிடத்தில் திசைத் திருப்ப வேண்டும். இதற்காக இப்படி செய்கிறார்கள். அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த விஷயத்தை கையாண்டு வருகிறார்கள். அது ஒரு சின்ன தவறு அதற்கு கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும். அவர் சிறப்பு அழைப்பாளர் மட்டுமே'' என்றார்.