Skip to main content

கள்ளக்குறிச்சி: கள்ள விற்பனைக்கு பதுக்கப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
Liquor captured

 

 

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சந்தையில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தநாடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேஷ் மற்றும் பழனிமலை ஆகியோரின் வீட்டில் அட்டை பெட்டிக்குள் மற்றும் சாக்கு மூட்டைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஆயிரம் மதுபாட்டில்கள் 110 பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

ஊரடங்கு உத்தரவு காரணமாக கிராமப்புறங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் சாகுல் கதைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் தீவிர கள்ளமது வேட்டையில் ஈடுபட்ட போது சேந்தநாடு கிராமத்தில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

 

போலீசாரை கண்டதும் மகேஷ் பழனிமலை ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முழுநேர ஊரடங்கினை முன்னிட்டு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து அதைபதுக்கி வைத்து நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு கிராமப்புறங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

 

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மது பாட்டில்களையும் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகாவிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையிலான போலீசார் வெள்ளையூர் அங்கனூர் சின்னகுப்பம் உட்பட பல்வேறு கிராமங்களில் தீவிர கள்ள மது வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்து வந்த கோபிநாத் ஆறுமுகம் பெருமாள் ரவி பிரபு ஆகியோரை கைது செய்துள்ளனர் அவர்களிடமிருந்து 30க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 

டாஸ்மாக் கடைகளிலிருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று கிராமப்புறங்களில் அதிக விலைக்கு விற்று, லாபம் பார்க்கும் கள்ள மார்க்கெட் வியாபாரிகள் உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிகரித்துள்ளனர். காவல்துறை அவ்வப்போது ரெய்டு செய்து கள்ள மது விற்கும் பேர்வழிகளை மது பாட்டில்களுடன் கைதுசெய்தும் கூட மீண்டும், மீண்டும் கள்ள மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்