தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் வெண்மணி, வேளாங்கண்ணி, நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
காலையிலேயே கீழ்வெண்மணி நினைவிடப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநர் கலந்து கொள்ள இருக்கக்கூடிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார்கள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.