சுதந்திரத்திற்காகவும் போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சமீபமாக ஆளுநரின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் மறுத்துள்ளதால், நாளை அவர் பங்கேற்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வரும் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதற்கும், விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுப்பதைக் கண்டித்தும் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.