
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களைக் கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஈரோடு மாவட்ட பா.ஜ.க பொருளாளர் ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ.க.வின் தெற்கு மாவட்டப் பொருளாளர் தீபக்ராஜா. இவர் இன்று 27ஆம் தேதி ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சமயத்தில் அவர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே திருமண நிகழ்ச்சிக்கு வருவதை அறிந்து, அவரை கைது செய்யாததைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம்.
பிறகு எனது ஊரான கந்தசாமியூர் அருகே ரோட்டின் ஓரமாக எனது காரை நிறுத்திவிட்டு கட்சி நிர்வாகிகளான சண்முகம், ரகுபதி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் எனது வாகனத்தையும், எங்களையும் கற்களால் தாக்கினார்கள். இதில், சண்முகத்திற்கும், ரகுபதிக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. எனது காரும் சேதமானது. பின்னர், அந்த நபர்கள் என்னையும், ரகுபதியையும் அடையாளம் காட்டி இன்னும் ஒரு வாரத்தில் தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டும் வகையில் பேசிக்கொண்டு சென்றனர்.
திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரிடம் அரசியல் செல்வாக்கு, பண பலம், ஆள்பலம் உள்ளதால் எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. எனவே, அந்த நபர்களால் எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சட்டப்படி எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களை மிரட்டிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 27ஆம் தேதி, திருமாவளவனை கைது செய்யக் கோரி ஈரோட்டில் பா.ஜ.க மகளிரணி ஆர்பாட்டம் நடத்தியது.