
கம்பன் விழாவில் பங்கேற்க வந்த சுகி சிவத்தை வேண்டுமென்றே சீண்டிய பாஜக தொண்டர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆண்டுதோறும் கம்பன் விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 85வது ஆண்டு கம்பன் திருவிழாவை காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தலைமையில், கடந்த 2ஆம் தேதியன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இதன் தொடக்க விழாவில், முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பங்கேற்ற நிலையில், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவமும் பங்கேற்றார்.
அப்போது, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுகி சிவம் வந்துள்ளார். மேலும், அவர் தனது காரை விட்டு இறங்கியபோது, அங்கு கூடியிருந்த பாஜகவின் மாவட்டச் செயலாளர் நாகராஜன் உள்பட சில கட்சித் தொண்டர்கள், சுகி சிவத்தை உள்ளே அனுமதிக்காமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சுகி சிவம் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். அதனால், அவர் இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என கோஷங்களை எழுப்பிக்கொண்டு, அந்த மண்டபத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனிடையே, அங்கு வந்த பழம் பெரும் முதியவரான பழ. பழனியப்பன், அந்த பாஜக தொண்டர்களின் காலில் விழுந்து சுகி சிவத்தை பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றார்.
ஆனால், அப்போதும் அடங்காத பாஜக தொண்டர்கள், அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சலிட்டபடி பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தெற்கு காவல்நிலைய போலீசார், பாஜக மாவட்டச் செயலாளர் நாகராஜன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.