சிறுமிகளுக்கு ஆபாசப் படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைதாகியிருக்கும் பாஜக ஒன்றிய நிர்வாகி மகாலிங்கத்தின் மகன்களும் குண்டர்கள் சிலரும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களைக் கொடூர ஆயுதங்கள் கொண்டு தாக்கியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மயிலாடுதுறையை அடுத்துள்ள கோழிகுத்தியைச் சேர்ந்தவர் மகாலிங்கம், பாஜகவில் ஒன்றிய பொறுப்பில் இருந்துவருகிறார். அவர் அதே தெருவில் வசித்துவரும் சிறுமிகளிடம் ஆபாசப் படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தக் கொடுமையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 13ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், “சிறையிலுள்ள மகாலிங்கத்தின் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்திற்கு ஆபத்து இருக்கிறது, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்கள்” என்று தெரிவித்தனர். அதோடு இந்த விவகாரத்தைக் காவல்துறையினர் கவனமாக கையாள வேண்டுமென்றும் போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தினர்.
இந்நிலையில், போராட்டத்தில் பெற்றோர்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியதுபோலவே 15ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களான பாண்டியராஜன் மற்றும் சத்யராஜ் ஆகியோரை மகாலிங்கத்தின் இரண்டு மகன்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட அடியாட்கள் கொடூரமான ஆயுதங்களால் கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிருக்குப் போராடிவருகின்றனர். “நாங்கள் சொன்னது போலவே நடந்துள்ளது. இந்தத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறையினர் சரியான முறையில் உரிய வழக்குகளைப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களிடம் விசாரித்தோம், “விசாரணைக்காக சென்றுவிட்டு வீடு திரும்பினோம். மகாலிங்கத்தின் மகன்கள் இரண்டு பேரோடு, ஐந்தாரு பேரு கத்தி, அரிவாளோடு வந்து திடுதிபுன்னு தாக்கினாங்க. உசுரு பொழச்சதே கடவுள் புண்ணியமாகிடுச்சி” என்கிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, “பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பெயரில் பிஜேபி கட்சியின் ஓ.செ மகாலிங்கத்தின் மகன்கள் இரண்டு பேரோடு, தாக்குதலில் ஈடுபட்டதாக நான்கு பேரை கைது செய்துள்ளோம்” என்கிறார்கள்.