திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 13 ந் தேதி ஒரு உணவு விடுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற கும்பல் உணவு சாப்பிட்ட போது பில் கூடுதலாக போட்டதாக ஏற்பட்ட தகராறில் உணவு விடுதி தரப்பிற்கும் கேரளா சுற்றுலா தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கேரளா சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் முத்துப்பேட்டை போலிசார்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் அதிகாலையில் பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பாவான அதிமுக நகர இளைஞரணி துணைச் செயலாளர் சந்திரபோஸ் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சத்தம் கேட்டு உடனே தீயை அணைத்ததால் பெரிய சேதங்கள் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும் போது... " பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனே கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்" என்று கூறினார்.
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ நாளில் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்த குமரைய்யா மகன் பாஜக பிரமுகர் வசந்த் (எ) வசந்த குமார் உள்பட 7 பேர் சேர்ந்த கும்பல் தான் அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது கண்டறியப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசும் முன்பு சித்தமல்லியில் மதுவிருந்து நடந்திருப்பதும் அதில் உணவு விடுதி உரிமையாளர் சகோதரர் மற்றும் பெட்ரோல் குண்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் உடன் ஏற்கனவே பிரச்சனையில் ஈடுபட்டிருந்த நபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு பாஜக பிரமுகர் வசந்த (எ) வசந்த குமார் கைது செய்யப்பட்டார். மற்ற 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வசந்த் ஏற்கனவே திமுக பிரமுகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த வழக்கிலும் சம்மந்தப்பட்டவர் என்றும் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு ஆதரவாக பெட்ரோல் குண்டு வீசி இருப்பார்கள் என்று திசை திருப்ப முயன்று கடைசியில் பாஜக பிரமுகர் வசந்த் சிக்கிக் கொண்டதால் பாஜக விலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது போல தொடர் சம்பவத்தில் ஈடுபடும் வசந்த் மீது குண்டர் தடுப்பு காவல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர்.