இந்திய அரசு, நாட்டில் கல்வியை மேம்படுத்துவதாகப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
அசாமி, மராத்தி உள்ளிட்ட இந்தியாவின் 17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அவ்வப்போது பிரதமர் மோடி புகழ்ந்து வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, ''புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கம் தமிழர்களுக்குத் தெரியக்கூடாது எனத் திட்டமிட்டு, புதிய கல்விக் கொள்கைக்கான தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை. புதிய கல்விக் கொள்கை தமிழருக்கு எதிரானது என்பதால் திரவிட இயக்கங்கள் எதிர்க்கின்றன'' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''மத்திய பாஜக அரசு மாற்றாந்தாய் உணர்வுடன் தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது. எட்டாம் அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாநில உரிமை, மொழி உணர்வுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது'' எனக் கூறியுள்ளார்.