
தென்காசி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் மற்றும் புதுச்சேரி நிரவி டி.ஆர்.பட்டிணம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகளில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், குறிப்பாக தபால் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கோரியிருந்தார்.
புதுச்சேரியில் நிரவி - டி.ஆர்.பட்டிணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என். நாக தியாகராஜனிடம் 5511 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் வி.எம்.சி.எஸ்.மனோகரன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் மனுவில், தேர்தல் பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைந்த பிறகு வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரப்புரை செய்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அதன்மூலம் அவர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து இந்திய தேர்தல் ஆணையம், தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் மற்றும் காரைக்கால் எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.