அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ''அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தது தமிழகத்தில் கண்டனங்களை பெற்றது.
மத்திய உள்துறை அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புரட்சிப் பாவலர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவிதை தொகுப்பில் வரும் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கு வேர்' என்ற வரியை கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் 'ழ' கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழ்த்தாயின் 'தமிழணங்கு' ஓவியத்தை ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்தார். இந்நிலையில் இதற்கு போட்டியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே' எனவும், 'தமிழ்த்தாய்' எனவும் என குறிப்பிட்டு ஓவியம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.