Skip to main content

எம்.ஜி.ஆர் உறவினர் கொலை வழக்கு; 17 வருடங்களுக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட மனு!

Published on 27/02/2025 | Edited on 27/02/2025

 

Bhuvana files bail plea in MGR  relative Vijayan case

எம்.ஜி.ஆர் தனது மூன்றாவது மனைவி  ஜானகியின் சகோதரியின் பிள்ளைகளான லதா, கீதா, சுதா, பானு ஆகிய நால்வரையும் வளர்ப்பு குழந்தைகளாக வளர்த்தார். அதில் ஒருவரான சுதாவின் கணவர் விஜயன் கடந்த 2008 ஆம் ஆண்டு 4 ஆம் தேதி இரவு சென்னை கோட்டூர்புரம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு, பின்பு உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கை கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வந்தநிலையில், விஜயன் மனைவி சுதா அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்து கேட்டுக்கொண்டதின் பேரின் இந்த வழக்கை அப்போதைய திமுக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் கொலையில் சுதாவின் சகோதரி பானுவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பானு, காவலர் கருணா, பானுவின் தோழி புவனா உள்பட 8 பேர் வழக்கின் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட 8 பேருக்கும் ஆயுள் தண்டனை என அறிவித்தது. 

Bhuvana files bail plea in MGR  relative Vijayan case

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் 8 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது வண்டியை நான் வாடகைக்கு தான் கொடுத்தேன் மற்றபடி எதற்காக அவர்கள் வாகனத்தைக் கேட்டார்கள் என்று எனக்கு தெரியாது என்று கூறியதால் கார்த்தி மற்றும் பானுவை விடுவித்து மற்றவர்களுக்கு உயர்நீதிமன்றம் தண்டனை உறுதி செய்தது. ஆனால் கார்த்தியும் பானுவும் வழக்கில் குற்றவாளிகள் தான் என்று சிபிசிஐடி போலீசார் உச்சநீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.

இந்த நிலையில், “கொலை நடந்தபோது நான் சென்னையிலேயே இல்லை; நான் எப்படி கொலை செய்திருக்க முடியும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேடப்படும் குற்றவாளியான புவனா ஜாமீன் கேட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை 28 தேதி அன்று நீதியரசர் சந்திரமோகன் முன்னிலையில் விசாரணைக்கு வருகின்றது. 

இந்த வழக்கின் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், புவனாவும் காவலர் கருணாவும் எம்.ஜி.ஆர் பள்ளியில் சிறுவயதில் ஒன்றாக படித்துள்ளனர். அதனால் இருவருக்கும் இடையே அப்போதிலிருந்தே நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. அதன்பிறகு பின்னாளில் புவனா தான் படித்த எம்.ஜி.ஆர் பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் பானுவுடன் புவனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக மாறினர்.  

Bhuvana files bail plea in MGR  relative Vijayan case

இந்த சூழ்நிலையில்  எம்.ஜி.ஆர்.மறைவிற்கு பிறகு அவரின் சொத்தை விஜயனும் சுதாவும் நிர்வகித்து வந்தனர். இதில் எம்.ஜி.ஆர். நிறுவிய பள்ளியை பானு தனது பெயரில் மாற்றி எழுதிக் கொடுக்க சொல்லியுள்ளார். ஆனால் விஜயன் - சுதா தரப்பில் மறுப்பு தெரிவித்ததையடுத்து இதுகுறித்து பானு தனது தோழியான புவனாவிடம் புலம்பி அழுதுள்ளார். அதற்கு பானுவிடம், எனது அப்பாவும் சொத்தில் பங்கு கேட்டதற்கு தர மறுத்ததால் கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டிய சம்பவத்தை எடுத்துக்கூறி அதேபோன்று விஜயனையும் கொன்றுவிடுவோம் என்று கூறியுள்ளார். அதற்கு பானு சம்மதம் தெரிவிக்க, காவலர் கருணா தோழி புவனா உதவியுடன் கூலிப்படையை அமைத்து விஜயன் காரில் வரும்போது அந்தக் கார் மீது மற்றொரு வாகனத்தை மோதச் செய்து, அவரை காரை விட்டு வெளியேறச் செய்து இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் வகுத்து கொடுத்துவிட்டு கொலை நடக்கும் முன்னதாகவே புவனா துப்பாய் சென்றுவிட்டார்  என்று  தெரிவித்தனர். மேலும் இதனை பானுவின் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் சொன்ன வாக்குமூலத்தை வைத்து உறுதிசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான், ஏ1 பானு, ஏ2 கருணா, புவனா மற்றும் கூலிப்படை சுரேஷ் கார்த்திக் தினேஷ்குமார் சாலமன் கார்த்திக் என 8 பேரும் வழக்கின் குற்றவாளிகள்தான் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதுநாள் வரை வழக்கில் எந்த கேள்வியும் எழுப்பாமல் இருந்த புவனா 17 வருடம் கழித்து தற்போது பிணை கேட்டு வழக்குத் தொடர்ந்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சார்ந்த செய்திகள்