ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசான விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விவசாய பயன்பாட்டுக்காக தண்ணீர் திறக்கப்படும் என வீட்டுவசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததோடு, நகராட்சி பகுதியில் வசிப்பவர்களின் குடும்பத்தில் இறந்தவர்களுகான ஈமச்சடங்கு நிதி மற்றும் பயனாளிகளுக்கு உதவித்தொகையினை வீட்டுவசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர் கூட்டனி சார்பில் 2.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டும் வருகின்றது. தமிழகம் முழுவதும் பெரிய திட்டங்களை செயல்படுத்த தமிழக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 90 திட்டங்கள் துவக்குவதற்கு தேவையான பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி வரும் 3ம் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ள நிலையில், கரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கட்சியினருக்கும் மரியாதை செலுத்த அரசு வழிமுறையை வகுத்துள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்"என்றார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையையேற்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக ஆகஸ்ட் 15 ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.