முண்டாசுக்கவி பாரதி அவதரித்த நெருப்புக்கோட்டையான எட்டயபுரத்தைக் கலகலப்புத் திருவிழா வாக்கியிருக்கிறது அவரின் 140- வது பிறந்தநாள் விழா.
டிச. 11 அன்று எட்டயபுரமே திருவிழாக் கோலத்திலிருந்தது. அன்றைய தினம் நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் நடத்திய பாரதியின் பிறந்த நாள் திருவிழாவிற்கு பாராளுமன்ற எம்.பி.கனிமொழி அமைச்சர்களான கீதாஜீவன், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்களான மார்க்கண்டேயன் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்ட விழா மண்டபம், கொள்ளவையும் தாண்டியிருந்தது.
நக்கீரன் ஆசிரியர் கோபாலின் தலைமை ஏற்பில் இனிய உதயம் பொறுப்பாளர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் வரவேற்புரையை அனல் வீச்சில் கொண்டு சென்றார்.
தாய் மொழியான தமிழ் மொழிக்கு தனி மரபு. செந்தமிழ் நாடெனும் போதினிலே என இதயம் போன்று வாழ்ந்த பாரதி. அருப்புக்கோட்டையின் நெருப்புக்கோட்டைக்கு வந்திருக்கிறோம் என தன் உரையில் வந்திருந்தோரைத் தனது கவி நடையில் வரவேற்றார் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்.
சிறப்புப் பேரூரையாற்றிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாணவ, மாணவிகளை இந்த நேரத்தில் சந்தித்தபோது மனம் பூரிக்கின்றது. அவர்களின் தமிழ்பற்று கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்களைப்பார்த்த போது பாரதி மறையவில்லை. அவர் இன்னும் எழுதிக் கொண்டுதானிருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன்" என்று பாரதிவேடம் பூண்டு அணிவகுத்த சின்னஞ்சிறார்களை பாராட்டிக் கௌரவித்தார்.
ஆண்டாள் பிரியதர்ஷினியின் வரவேற்புரையின் கவி அனலைக் கிளப்பியது. வேடிக்கை மனிதர் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ, பாரதி இங்கே மறு ஜென்மமெடுத்து நிற்கிறான். இது எங்கள் மண். இந்த மேடை எனது சொர்க்கம். ஒரு பத்திரிக்கைத்துறையிலிருந்து இந்த உலகிற்கு என்ன செய்ய வேண்டும். நடப்புகளை, உண்மைகளை வெளியுலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிற நக்கீரன் கோபால். இளைய பாரதிகளை அடையாளம் கண்டு மேடை ஏற்றுகிறார். அவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இந்த விழாவினை நடத்துகிறார்.
கவிதை எழுதுவது எளிது. ஆனால் அதுபோல் வாழவேண்டும் என்றவன் பாரதி. தன் பிள்ளை மற்றும் குடும்பத்தாரிடம் ஒரு பழைய டிரங்க் பெட்டியைத் திறந்து காட்டிய பாரதி, இவைகள் ஏடல்ல. கவிதைகள். ஒவ்வொன்றும் இரண்டு லட்சம். இரண்டாயிரம் கவிதைகள் உள்ளன என்றான். அது இரண்டுலட்சமல்ல இன்றைக்குப் பலகோடி. இனிவரும் காலம் பாரதி சொன்னதைப் போல பெண்களுக்கான காலமாக மாறும் என்று முடித்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
ஐ.பி.எஸ். அதிகாரியான மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார், பாரதி பற்றிய அரிய விஷயங்களை எடுத்துரைத்தவர், விடுதலைக் கவி மட்டுமல்ல. பெண் விடுதலைக் கவி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு அடிமை சமுதாயமான விடுதலை பற்றி எழுதியது இன்று நடக்கிறது. இன்று அனைத்துத் துறையிலும் பெண்கள். சட்டத்தின் மூலம் பெண்களுக்கெதிரான குற்றங்களை முழுவதும் களைய முடியாது. அதற்கு விழிப்புணர்வு வேண்டும் என்று லாஜிக்காகவும் பேசி அப்ளாஸ் வாங்கினார்.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வான மார்க்கண்டேயன் தன் ஜனரஞ்சக உரையில், "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும். அது காணுமிடமெல்லாம் பொன் விளைய வேண்டும் பராசக்தி என்றான் பாரதி. பராசக்தி எழுதிய தலைவர் கலைஞரின் மகளான கனிமொழி வானம் பார்த்த, இந்த மண்ணை சிறக்கச் செய்யவேண்டும் என டைமிங்காகச் சொன்னது அனைவரையும் நிமிரச் செய்தது" என்றார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பாரதி போன்ற இந்த இளம் பாரதிகள், பாரதி இப்படித்தான் கவியிலும் கம்பீரமாக இருப்பதை உணர்த்துகிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தபோது, நக்கீரன் ஆசிரியர் ஆட்சியரைப் பார்த்து தன் இரு கைகளால் தன் கன்னத்தைக் காட்டி சைகை செய்து, அவர் போட்டிருந்த மாஸ்க்கைக் கழட்டி விட்டுப் பேசும் படி கேட்டுக் கொள்ள, கலெக்டரோ அதனை வேறு மாதிரியாகப் புரிந்து கொண்டு, அவரின் மீசையைத் தான் சைகையால் குறிப்பிடுகிறாரோ எனப் புரிந்தவர், எனக்கு மீசை கிடையாது என்று ஆட்சியர் யதார்த்தமாகச் சொல்ல, மண்டபமே புன்னகையால் கலகலப்பாகி நல்லதொரு ரிலாக்ஸ் மூடிற்குவர, அதன் பிறகே, கலெக்டரிடம் மாஸ்க்கைக் கழட்டிவிட்டுப் பேசுங்கள் பார்வையாளர்களுக்கு தெரியட்டும் என்றேன் என்றார் ஆசிரியர் புன்னகையோடு. தலைமையுரையாகப் பேச வந்த நக்கீரன் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார் அமைச்சர் கீதாஜீவன்.
வரும் போதே விருந்தாளியா யிங்க வந்த எனக்கு தலைமை கிடைக்கும்னு நெனைக்கல்ல. வெள்ளம் நிறைந்த தூத்துக்குடி இன்று க்ளீன். கீதா ஜீவன்ட்ட சொன்ன உடனே. அண்ணே சரிபண்ணியாச்சு. சொன்ன உடனே நடப்பு. ஒரு ஆட்சி மாற்றம் என்பது இது தான். பாரதி வேடம் புனைந்து அனல் பார்வையோடும் கம்பீர மீசையோடும் வந்த இளம் பாரதிகளை வாழ்த்தியவர். டைமிங்காக, ஆட்சியருக்கு மீசையில்லதாம். ஆனா பாரதி பற்றிப் பலகருத்துக்களைக் ஆட்சியரும், எஸ்.பி.யும் பேச்சுல அடிச்சிப் பின்னியெடுக்குறாங்க. பல வருடம் கழிச்சி ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு அமைச்சர் பெருமக்கள் இந்த இளம் பாரதி பிள்ளைகளை மேடை ஏற்றியது அந்தப் பிள்ளைகளுக்குப் பெரிய அங்கீகாரம் என படு ஷார்ப்பாகவும் கிராமிய நடைமுறையில் இயல்பாக நக்கீரன் அசிரியர் பேசி முடிக்க மண்டபத்தைச் சற்றிக் கைத்தட்டல்கள்.
மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரான கீதாஜீவன், மாணவ, மாணவிகளின் பாரதி வேடம், வேடம் மட்டுமல்ல அது அந்தக் குழந்தைகளை சிந்தனையாளர்களாக மாற்றிய வேடம். சட்டங்களை இயற்றவும் பட்டங்களை ஆள்வதும் பாரினில் பெண்களே என்று பாடினான். அதான் இன்று நடக்கிறது. சாதி இரண்டொழிய வேறில்லை. ஆண், பெண் என இரண்டே சாதி என்று அன்றே சொன்னான் பாரதி என்றார் முத்தாய்ப்பாக.
இது வானம் பார்த்த பூமிதான். ஆனால் மானம் காத்த பூமி. பாரதியின் கனவைப் போன்று கல்விச் சாலைகளை அமைத்தவர் தலைவர் கலைஞர். காக்கை குருவிகள் எங்கள் ஜாதி. காட்டு மிராண்டிகள் இரண்டாம் சாதி என்றவன், தான் விரும்பிய தன்வாழ்க்கைக் கட்டுரையை எழுதும் போதுதான் அவனது மூச்சு அடங்கியது என்று அரிய விஷயங்களை வெளிப்படுத்தினார் தமிழ் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சித்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு.
அனைவருக்கும் பாரதிபிறந்த நாள் வாழ்த்துக்கள் என தம் பேச்சிலும் புரட்சியை ஏற்படுத்திய கனிமொழி எம்.பி. இரண்டாயிரம் பேர் கவிதை எழுதினார்கள். அதில் பரிசு பெற்றவர்களைத் தேர்வு செய்வது பெரிய விஷயம். பாரதிபற்றிப் பேசாத விஷயங்களையும் இங்கு பேசினார்கள். வெளிநாடு செல்லுங்கள். அங்குள்ள கலைச்செல்வங்களை இங்கு கொண்டு வந்து சேருங்கள் என்றவன் பாரதி. உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும். மாணவச் செல்வங்களின் மனதில் ஆயிரம் கனவுகள். அடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நீங்கள் தான் என்ற கனவிருக்கவேண்டும். ஏனெனில. எமக்குத் தொழில் கவிதை. என் கனவு. அதை நோக்கித்தான் செல்வேன் என விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தான். அதைப் போலவே பள்ளி மாணவர்கள் எத்தனை தடை வந்தாலும் உங்களுக்குரிய கொள்கைகளுக்கு தடை இருக்கிறது. அதில், நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். தடையை வென்று காட்ட வேண்டும் என்று அழுத்தமாகப் பேசி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவைகளை பதியப்பட்ட ஆடியோ மூலம் இசைக்காமல், தேர்ந்த பாடகர்களைப் பாட வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு முதன் முதலாக விழா நிறைவாக இங்கே மாணவிகள் பாடிய தேசிய கீதத்துடன் நடந்தேறியது.