காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், அமீர் உள்ளிட்டவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது என்றார்.
இயக்குனர் அமீர் பேசும்போது, சுதந்திர போராட்டத்தின்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக போராடினார்கள். அனைவரும் அறவழியில் போராடவில்லை. ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள். போராடக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ முடிந்த வரை போராடுவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் மத்திய அரசு சட்டத்தை மீறுகிறது. கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுவதால் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் அங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடாதாம். ஏனென்றால், தமிழர்கள் போராட மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழகம், கர்நாடகத்தில் ஒரே அரசு அமைந்தால் தான் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றால் மத்திய அரசு எதற்காக? என கேள்வி எழுப்பினார்.
நடிகர் சத்யராஜ், நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது எனவே அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் அது இளைஞர்களை திசைத்திருப்பிவிடும் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, நாளை சேப்பாக்கம் மைதானம் காலியாக இருந்தால் தான் காவிரி பிரச்சினை உலகிற்கே தெரியும். தேசிய கட்சிகள் ஆட்சியமைக்க முடியாததால், தமிழகத்தை குப்பைக் கிடங்காக மாற்றிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.