தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நிகழ்ச்சி கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. வைகை அணையில் உள்ள பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களின் ஆட்சியர்களும் மூன்று அமைச்சர்களும் மலர்தூவி தொடங்கிவைத்தனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பகுதியான 19,439 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,130 கனஅடி வீதம் நேற்றுமுதல் (11.08.2021) 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியாறு வைகை வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் சுகுமாறன், பவளக்கண்ணன், முல்லைப் பெரியாறு பிரதான கோட்டச் செயற்பொறியாளர் மற்றும் விவசாயிகளோடு பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், மதகுப் பகுதியில் பல தேன்கூடுகள் இருந்துள்ளன. மதகுகள் திறந்துவிடப்பட்ட நிலையில், அதன் அருகில் இருந்த தேன் கூடுகள் கலைந்தன. இதன் காரணமாக கூட்டில் இருந்த தேனீக்கள் வெளியேறி அங்குள்ளவர்களை ஆக்ரோஷமாக கொட்டத் தொடங்கின. இதனால் பலரும் ஓட்டமெடுத்தனர். இதில் தேனி, திண்டுக்கல் ஆட்சியர்கள் முரளிதரன், விசாகன், தேனி காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே, அணை உதவிப் பொறியாளர் குபேந்திரன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டின. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தேனீக்கள் விரட்டியதால் 2 மதகுகளை மட்டும் திறந்துவிட்டு அனைவரும் உடனடியாக வெளியேறினர். பின்பு நிலைமை சரியானதும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் இதர மதகுகளிலும் நீரை திறந்துவிட்டனர்.