நாமக்கல் செல்லப்பா காலனியைச் சேர்ந்தவர் குமரன். இவருடைய மகன் லோகேஷ்வரன் (22). இவர், கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., முடித்துவிட்டுத் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார். இதற்கிடையே அவர் ஆன்லைன் நிதி நிறுவனம் மூலம் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதை லோகேஷ்வரனால் திருப்பிச் செலுத்த இயலவில்லை. தவணைக் காலம் முடிந்ததால் கடனைத் திருப்பிக் கேட்டு, ஆன்லைன் நிறுவனத்தினர் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பிறகும் அவர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் கடன் கொடுத்த நிறுவனத்தினர், லோகேஷ்வரனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். தங்களுக்குத் தெரியாமல் கடன் வாங்கியது ஏன் என்று பெற்றோர் கேட்டுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர், ஜூன் 7ஆம் தேதி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பெற்றோர் மகனை மீட்டு உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் லோகேஷ்வரன், வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.