வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் நேற்று மாலை (05.03.2024) அப்பகுதியில் சுற்றித் திரிந்த அடையாளம் தெரியாத வடமாநில வாலிபரை, குழந்தை கடத்த வந்தவர் என நினைத்த பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.பி. மணிவண்ணன் வேலூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். பின்னர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் குமார் தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணையில், அந்த நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜில்லுதா கோஸ் என்பதும் சற்று மனநலம் பாதித்தவர் என்பதும், வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு குடும்பத்தோடு சிகிச்சைக்காக வந்ததும் தெரிந்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜில்லுதா கோஸ் குழந்தை கடத்த வந்தவன் எனக்கூறி தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது முற்றிலும் உண்மைக்குப் புறமான தகவல். இத்தகைய தகவல்களைப் பகிர்வதோ, பதிவிடுவதோ சட்டப்படி குற்றம். மேலும் ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிவிடுபவர் மற்றும் பகிர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.