திருச்சி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம், தமிழ்நாடு கிராம வங்கி, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி உள்பட மொத்தம் முப்பத்தி ஏழு வங்கிகள், அதன் 493 கிளைகளின் வங்கி வாடிக்கையாளர் தொடர்பு முகாம் திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நேற்று (26.10.2021) நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பேசுகையில், "வங்கிகள் சுய உதவிக் குழு கடன், மாவட்ட தொழில் மையம், தாட்கோ திட்டங்களுக்கு அதிக கடன் வழங்கி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உழைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். விவசாயக் கடன், சுய உதவிக் குழு கடன், குறு, சிறு நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டுவசதிக் கடன், கல்விக் கடன், வாகன வசதிக் கடன், தனிப்பட்ட நுகர்வோர் கடன் என மொத்தம் ஆயிரத்து 941 பேருக்கு 160 கோடியே 30 லட்சம் அனைத்து வங்கிகளின் மூலம் கடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து வங்கிகள் சார்பில் 30 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் சேவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டன.