கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்தவர்களில் 67 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் சாராயம் மற்றும் கஞ்சா, போதை புகையிலை தடுக்கும் வகையில் அதை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளுவர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள கஞ்சா கடத்துபவர்கள், கள்ளச்சாராயம் காட்சிபவர்கள், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்பவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் முடக்க ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
அதன் பெயரில் கடலூர் மாவட்டத்தில் 71 பேர் மீதும், விழுப்புரம் மாவட்டத்தில் 98 பேர் மீதும், கள்ளக்குறிச்சியில் 13 நபர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 41 நபர்கள், திருவள்ளுவர் 12, வேலூர் 33, திருவண்ணாமலை 77, ராணிப்பேட்டை 44, உள்ளிட்ட 466 பேரின் வங்கி கணக்குகள் முடக்கி வைத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் ஒரு சம்பவத்திற்குப் பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறையினர் கஞ்சா மற்றும் சாராயத்திற்குப் பின்புலமாக பல்வேறு தரப்பினர் இருந்தாலும் இதற்கு முக்கியமாக முதல் இடத்தில் காவல்துறையினர் உள்ளனர். அவர்களை முதலில் களை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா தொடர்பில் உள்ளவர்களிடம் காவல்துறையினர் யார் தொடர்பில் இருந்தார்கள்? அவர்கள் எவ்வாறு பணத்தைப் பெற்றார்கள்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இது தொடர்கதையாக இருந்து கொண்டு தான் இருக்கும். அனைத்தும் கண் துடைப்பு நடவடிக்கையாக மாறிவிடும்.
அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பைத்தம்பாடி, ராசா பாளையம், கன்ரகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது புதுச்சேரியில் இருந்து விஷ சாராயத்தை வாங்கி வந்து தண்ணீர் ஊற்றி விற்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இதற்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை ஐ.ஜி கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளனர்.