சேலத்தில் வழிப்பறி கொள்ளையனை, காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் ஜான்சன் பேட்டை கன்னாங்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் பிரதாப் என்கிற சுகேஷ் (வயது 21). கடந்த 2021- ஆம் ஆண்டு, ஜான்சன்பேட்டையில் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த அவர், கடந்த ஜூன் 2- ஆம் தேதி, ஜான்சன்பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ஜூன் 4- ஆம் தேதி, ஜட்ஜ் சாலை அருகே நடந்து வந்து கொண்டிருந்த லட்சுமிகாந்தன் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 1,800 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் நடந்த அன்று, அவரை கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிரதாப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை ஆணையர் மாடசாமி பரிந்துரை செய்தார். அதை ஏற்ற மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் புதன்கிழமை (ஜூன் 29) பிரதாப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.