தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுன் பெயரையும், இலச்சினையையும் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுன் பெயர், வணிக சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அச்சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019ல் வழக்கு தொடர்ந்தார். அதில், ஜி.பாலசுப்ரமணியன் தங்களின் சங்கத்தில் இருந்து விலகி, அதே பெயர் மற்றும் இலச்சினை (வணிக குறி) பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். சங்கத்தின் பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும், சங்கத்தின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, உறுப்பினர்களிடம் சந்தா வசூலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கில்ட் பெயர், இலச்சினை ஆகியவற்றை பயன்படுத்தவும், கில்ட் பெயரை பயன்படுத்தி வசூலித்த சந்தா தொகையை எங்களுக்கு தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஷ்வரி ஆஜராகி, 1965ல் சங்கத்தை தொடங்கி, 2017 ஆம் ஆண்டு பதிவு செய்திருப்பதாகவும் ஜாகுவர் தங்கம் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுன் பதிவை ரத்து செய்துவிட்டதாக தவறான தகவல்களை அளித்து ஜி.பாலசுப்பிரமணியன் புதிய சங்கத்தை அதே பெயரில் பதிவு செய்ய முயற்சித்து வருகிறார் என குற்றம்சாட்டினார்.
சங்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுகுழு கூட்டம் நடத்தபடவில்லை எனவும், பொதுகுழு கூட்டம் நடத்தப்படாததால் விளக்கம் கேட்டு சங்கங்களின் பதிவாளர் நோட்டீஸ் மட்டுமே அனுப்பினார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக 9 முறை கூட்டம் நடத்தபட்டதாகவும் வாதிட்டார். எனவே தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுன் பெயர், மயில் உருவம் பொறித்த சின்னம் உள்ளிட்டவைகளை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
பாலசுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதங்களில், கில்டு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சங்கம் முறையாக செயல்படவில்லை எனவும், எனவே சங்கத்தை பெயர் உள்ளிட்டவைகளை சங்கங்களின் பதிவாளர் ரத்து செய்துவிட்டதாக கருதியே தாம் இந்த சங்கத்தை தொடங்கியதாகவும். எங்களின் சங்கத்தின் பெயரை பதிவு செய்ய கோரிய மனு சங்கங்களின் பதிவாளரிடம் நிலுவையில் உள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் தலைவர் ஜாகுவர் தங்கம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அதனால் வழக்கு தொடர ஜாகுவர் தங்கத்திற்கு முகாந்திரம் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது.
இதன் பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள தீர்ப்பில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படதாது மற்றும் கணக்கு வழக்கு தொடர்பாக மட்டுமே சங்கங்களின் பதிவாளர் விளக்கம் கேட்டு மட்டுமே நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், பதிவை ரத்து செய்து எந்த பிறப்பிக்கவில்லை என்பதாக ஆதாரங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஒரே பெயரில் இரண்டு சங்கங்கள் செயல்பட்டால் அது உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், மேலும் மனுதராரின் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுன் பெயர் மற்றும் வணிக குறி உள்ளிட்டவைகளை செயல்பாட்டில் உள்ளபோது, மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதால் அவற்றை பயன்படுத்த ஜி.பாலசுப்பிரமணியனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பெயரைப் பயன்படுத்தி பெறப்பட்ட சந்தா தொகை உள்ளிட்டவைகளை ஜாகுவார் தங்கம் தலைமையிலான சங்கத்திற்கு வழங்க வேண்டுமென பாலசுப்ரமணியனுக்கு உத்தரவிட்டுள்ளார்.