சென்னை ஐஐடியில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்க ஐஐடி நிர்வாகம் தடை விதித்து, மீறினால் 10-ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் வகுப்பிற்கு தினமும் தனது வளர்ப்பு நாயுடன் வந்து உடன் கூட்டி வந்த நாயை பல்கலைகழக வளாகத்தில் கட்டி வைத்து விட்டு வகுப்பறைக்கு வருவதை பழக்கமாக கொண்டிருந்தார். இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவி இது தொடர்பாக மத்திய அமைச்சரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தியிடன் புகார் தெரிவித்திருந்தார். அதனை அடுத்து அண்ணா பல்கலைகழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை ஐஐடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பானது, சென்னை ஐஐடி வளாகத்தில், விடுதியில் உள்ள மாணவர்கள் நாய், பூனை போன்ற எந்த செல்லப்பிராணிகளையும் வளர்க்க கூடாது. மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற வாய் மொழி உத்தரவு வெளியிட்ட நிலையில் தற்போது அந்த அறிவிப்பை முக்கியப்படுத்தும் நோக்கில் விடுதி அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டியுள்ளது ஐஐடி நிர்வாகம்.
ஏற்கனவே சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி சாப்பிட்டது தொடர்பாக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது செல்ல பிராணிகளை வளர்க்கக்கூடாது அப்படி வளர்த்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற அறிவிப்பு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.