சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியின் 5 வயது மகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய்கள் (ராட் வைலர் இன வகை) கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு மற்றும் கலப்பின, கலப்பற்ற நாய் இனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டஃபோர்ட் ஷயர் டெரியர், பிளா ப்ரோசிலேரியா, அமெரிக்கன் புல்டாக், டோன் ஜாக், ராட் வீலர், டெரியர் ரோடீசியன், உல்ப், கேனரியோ அக்பாஸ், மாஸ்கோ கார்ட், கேன்கார்சோ, பேண்டாக் உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வளர்ப்பு பிராணியாக இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
மேலும் பொது இடங்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வரும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு நாய்களைக் கூட்டிச் செல்லும் பொழுது கட்டாயம் நாய்க்கு சங்கிலி மற்றும் முககவசம் அணிவிக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப் பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.