Skip to main content

சில்லறைக் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய 'பலே' திருடன் கைது! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

 

'Bale' thief arrested for swindling tens of thousands of rupees in retail

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் நகரத்தில் உள்ள கடைகளில், கடந்த ஒரு மாத காலமாக, "கோயிலில் உண்டியல் காசு எண்ணப்படுகிறது, சில்லறை வேண்டுமா?" என கடை உரிமையாளர்களிடம் கேட்டு, 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

 

இதுகுறித்து விருத்தாச்சலம் கடைவீதியில் உள்ள துணிக்கடையில், சில்லறை வேண்டுமா? என்று கேட்டு, கடை உரிமையாளரிடம் பேசும் நபரின் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகி, கடை உரிமையாளர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று (24/06/2022) சில்லறை திருடன், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் உள்ள, தனியார் உணவகத்திற்கு வந்து, வழக்கம் போல், கோவில் உண்டியலில் காசு எண்ணுவதாக கூறி, சில்லரை வேண்டுமா? எனக் கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். 

 

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர், சம்பந்தப்பட்ட நபரை விசாரித்தபோது, கடை கடையாக சென்று சில்லறைத் தருவது போல் பணத்தை 'அபேஸ்' செய்து செல்லும் நபர் எனத் தெரிய வந்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். 

 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட விருத்தாசலம் காவல்துறையினர் முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட சில்லறை திருடன் நாகப்பட்டினம் மாவட்டம், மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நல்லகண்ணு என்பவரின் மகன் சக்திவேல் என்பதும், தனது இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு ஊர்களுக்கு சென்று, சில்லறை வேண்டுமா என்று கேட்பதுபோல் பல்லாயிரம் ரூபாய் நூதன முறையில் ஏமாற்றியது தெரிய வந்தது. அதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரபல எழுத்தாளர் வீட்டில் கைவரிசை; குற்ற உணர்ச்சியால் திருடன் செய்த வினோத செயல்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
a thief stole famous writers house in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் நாராயண் சுர்வே. இவர் மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக இருந்த பின்னால், பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் மாறியுள்ளார். இவரது வீடு, ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் உள்ளது. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது 84வது வயதில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில், தம்பதியர் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு விராரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஒரு வாரமாக வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட திருடன் ஒருவன், பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து, மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்த திருடன், வீட்டில் பிரபல எழுத்தாளர் நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளார். அப்போதுதான், அது பிரபல கவிஞரின் வீடு என்பது தெரியவந்தது. 

பிரபல கவிஞரின் வீட்டில் திருடிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், வீட்டில் திருடிய டி.வி உள்ளிட்ட பொருட்களை மூட்டை கட்டிவிட்டு மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். மேலும், அதோடு ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிச் சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதனையடுத்து, வெளியூர் சென்ற தம்பதியர், வீட்டிகிற்கு வந்த போது திருடன் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதத்தை பார்த்துள்ளனர். திருடனின் செயலைக் கண்டு தம்பதியர் நெகிழ்ச்சியடைந்தாலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும், கவிஞரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடனைப் பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திருடன் ஒருவர், பிரபல எழுத்தாளரின் வீட்டில் திருடிய பொருட்களை, மீண்டும் வைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாடு மோதி விபத்து; சிறப்பு உதவி ஆய்வாளர் பலி!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன். இவர் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் வந்த மாடு ஒன்று பாரதிதாசனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதிதாசன் மீது அச்சமயத்தில் அங்கு வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்துகளைச் சந்திப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்துப் பல முறை புகார் அளித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாடு மோதிய விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

முன்னதாக விருத்தாசலம் அருகே பரவலூர் - கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் குவிந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதே சமயம் மற்றொரு விபத்திற்குக் காரணமாக கார் ஓட்டுநரைப் பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக விருத்தாசலம் - சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் வெகுவாக அவதியடைந்தனர்.