Skip to main content

இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கும் உப்பங்கழிகள்- மரபு நடை நிகழ்வில் தகவல்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

nn

 

ராமநாதபுரம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 09.02.2023 முதல் 19.02.2023 வரை 5-வது புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியம், வரலாறு, சுற்றுலா சிறப்புமிக்க இடங்கள் பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்தும் பொருட்டு தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, காரங்காடு ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் மரபு நடை நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் உத்தரவின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி)  நாராயண சர்மா ஆகியோர் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

 

இதை ஒருங்கிணைத்து நடத்திய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு பேசியதாவது, “கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஓடை, ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகப்பகுதி உப்பங்கழிகளால் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. முற்காலத்தில் கப்பல்களில் இருந்து சரக்குகளை படகுகளில் ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் வருணிக்கும் கடற்கரைச்சோலை, துறைமுகத்தின் சூழலை அறிந்துகொள்ள காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உதவுகிறது. இவை ஆங்கிலேயர் காலம் வரை துறைமுகமாக இருந்தன.

 

தேவிபட்டினம், திருப்பாலைக்குடி செவ்விருக்கை நாட்டுப் பகுதியில் இருந்தன. இரு கோயில்களிலும் கருவறை விமானத்தின் பிரஸ்தரம் வரை கருங்கற்கள் மற்றும் மணற்பாறைகளைக் கொண்டும், மேல்பகுதி செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இவை சிறிய கோயில்களாக இருந்தாலும் கட்டடக்கலை, சிற்பக்கலை சிறப்பு கொண்டவை.

 

இங்குள்ள சிவன் கோயில்களின் அமைப்பு கொண்டு இவை கி.பி.11ஆம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் சோழர்கள் ஆதிக்கம் செலுத்தியதன் தடயங்கள் அதிகமாக காணப்படுகின்றன. திருப்பாலைக்குடி கோயிலில் சதுரமாக தொடங்கும் விமானத்தின் கீழ்ப்பகுதி மேலே செல்லச் செல்ல வட்டமாகக் குறுகி உள்ளது. இது தஞ்சை பெரிய கோவில் விமானம் போன்று சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது.

 

nn

 

தேவிபட்டினம் முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்தரசி உலகமாதேவியின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சிரிளங்கோமங்கலமான உலகமாதேவிப்பட்டினம் எனவும், முதலாம் சடையவர்மன் சீவிக்கிரமபாண்டியன் காலத்தில் சிறுகடற்கரைச் சேதுமூலம் போக்கீஸ்வரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் நானாதேசி எனும் வணிகக்குழு குறிப்பிடப்படுகிறது. தேவிபட்டினம் ஆரம்பத்தில் பிரம்மதேய ஊராக இருந்து, பின்னர் துறைமுகப் பட்டினமாக மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாசலபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, கல்லூரி பேராசிரியர்கள் இளவரசன், பெர்லின் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி, கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி மாணவ மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.