திருச்சி கோட்டை, தேவதானம் பூசாரி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் அம்மு (28), வளர்மதி (38). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தேவதானம் பகுதியில் உள்ள தண்டவாளம் பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது, அங்கிருந்த புதர்மறைவில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, துணியில் சுற்றிய நிலையில், தொப்புள் கொடி கூட காயாத நிலையில் பச்சிளம் ஆண் சிசு ஒன்று அழுதபடி கிடந்துள்ளது.
இதை கண்ட இருவரும் குழந்தையை மீட்டு, கீழரண்சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் சேர்த்தனர். பின்னர் போலீசார் மூலம் சைல்டு லைன் அமைப்பிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. சரியான நேரத்தில் குழந்தையை மீட்ட அம்மு மற்றும் வளர்மதியை அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர். இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.