25.10.2019 தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் உடல் நான்கு நாட்கள் முயற்சிக்கு பின் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் உடல் இடுக்கி போன்ற கருவி போன்ற கருவியின் மூலம் மீட்கப்பட்டு உடல் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் சுஜித் உடல் சவப்பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஆவாரம்பட்டி பாத்திமா புதுநகர் கல்லறைக்கு குழந்தை சுஜித் எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே வைக்கப்பட்டுள்ள சுஜித் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மீட்புப் போராட்டத்தின் பலன் கிடைக்காமல் சிறுவன் சுஜித் உடல் மட்டும் மீட்கப்பட்டது. அவனை உயிருடன் மீட்கை முடியாமல் போனது அங்கு மட்டும்மல்ல தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் மணப்பாறை மருத்துவமனையில் இருந்து சரியாக ஏழு மணி அளவில் ஆவாரம்பட்டி புதூர் கல்லறைக்கு நேரடியாக சிறுவனின் உடல் கொண்டுவரப்பட்டது. உடல் கொண்டு வருவதற்கு முன்பே அவருடைய பெற்றோர்கள் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் ஆவாரம்பட்டி கல்லறை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோல் அங்கு இருக்கக்கூடிய கிராம மக்களும் சுற்றுவட்டார பகுதிமற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருக்கக்கூடிய பொதுமக்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
தற்பொழுது உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே கல்லறையில் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக குழி ஒன்று தோண்டப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நான்கு நாட்களாக மண்ணுள் சிக்கித் தவித்த அந்த சின்னஞ்சிறு இதயம் மீண்டும் மண்ணுக்குள்ளேயே துயில்கொண்டது.