
தமிழ்நாடு அரசு பால் நிறுவனமான ஆவினில் புதியதாக குடிநீர் விற்பனையை துவங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆவினில் இனி தண்ணீர் பாட்டில்களை விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளொன்றுக்கு ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய ஸ்டாலின் அவர்கள், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.
குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?
உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.