avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத்துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள்இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.