பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாகக் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம் சவுக்கு சங்கருடைய தாயார் கொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் நீதிபதி பாலாஜி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். கோவை சிறையில் இருக்கக்கூடிய சவுக்கு சங்கரைப் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அடுத்த கட்டமாக விசாரணை செய்வதற்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளார்கள். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்வதற்குச் சென்னை நீதிமன்றத்தினுடைய பொறுப்பு தலைமை நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு யார்? அந்த விசாரணை எப்போது நடைபெறும் என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'இந்த வழக்கை பொறுத்தவரை அதிகாரம்மிக்க நபர்கள் சிலர் அவர்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரணைக்கு எடுக்க நேரிட்டேன்' என குறிப்பிட்டார். நீதிபதி குறிப்பிட்ட இந்தக் கருத்தின் வாசகம் தீர்ப்பிலும் இடம் பெறுமா என்பது தெரியவில்லை. தீர்ப்பிலும் இந்தக் கருத்து சுட்டிக்காட்டப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் சவுக்கு சங்கர் வழக்கில் இறுதி விசாரணை அவசரமாக நடத்தப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டு இருப்பது நீதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.