தஞ்சாவூரில் ஹோட்டல் ஒன்றில் கொத்து பரோட்டா இல்லை என கூறியதால் இளைஞர்கள் சிலர் கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் வண்டிக்கார தெருவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று இரவு இளைஞர்கள் சிலர் உணவு சாப்பிட வந்துள்ளனர். அப்பொழுது கொத்து பரோட்டா வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் கடை ஊழியர்களோ தங்கள் ஹோட்டலில் கொத்து பரோட்டா இல்லை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறிய அந்த இளைஞர்கள் மீண்டும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.